Tuesday, December 30, 2008

லே அவுட் ரெடி!

சென்னை பச்சையப்பா கல்லூரிக்கு எதிரே இருக்கும் திடல் மெல்ல மெல்ல பூங்காவாக உருமாற்றம் அடைந்துவருகிறது.

சென்னை புத்தகக் கண்காட்சி 2009க்கான லே அவுட் தயாராகிவிட்டது. உங்கள் அபிமான பதிப்பகங்கள் எங்கே இருக்கின்றன என்பதைத் தெரிந்துகொள்ள ஆசையாக இருக்கிறதா?

இங்கே வாருங்கள்!

Sunday, December 28, 2008

அத்வானி, ஜோதிபாசு. கூடவே ஒபாமா!

உண்மையிலேயே பொருந்தாக்கூட்டணி என்றால் அது இவர்களுடைய கூட்டணிதான். அத்வானிக்கும் ஜோதிபாசுவுக்கும் கொள்கை ரீதியாக ஆகாது. ஒபாமாவுக்கும் ஜோதிபாசுவுக்கும்கூட கொள்கை ரீதியாக ஆகாது. ஒபாமாவை அத்வானி எப்படிப் பார்க்கிறார் என்று தெரியவில்லை. ஆனாலும் மூவரும் ஒரே குடையில் சங்கமிக்க இருக்கிறார்கள். சென்னை புத்தகக் காட்சி 2009ல்

'என் வாழ்க்கை, என் தேசம்' என்று சொல்லிக்கொண்டு வருகிறார் அத்வானி. 'நினைவுக்கு எட்டியவரை' சொல்கிறேன் என்கிறார் ஜோதிபாசு. இந்த இரண்டு புத்தகங்களும் சுயசரிதங்கள்.

ஒபாமா பற்றி மூன்று புத்தகங்கள். விகடன் பிரசுரத்தில் இருந்து, 'ஆம், நம்மால் முடியும்', ஆழி பதிப்பகத்திலிருந்து 'ஒபாமா', கிழக்கு பதிப்பகத்தில் இருந்து, 'ஒபாமா, பராக்!'.

இன்னும் என்னென்ன புத்தகங்கள் சர்ப்ரைஸ் விசிட் செய்யப்போகின்றன என்று தெரியவில்லை. தெரிந்ததும் எழுதுகிறேன்.

Saturday, December 27, 2008

அடம் பிடிக்கும் புத்தகங்கள்!

திருவிழா. எழுத்தாளர்களுக்கு. வாசகர்களுக்கு. பதிப்பாளர்களுக்கு. விற்பனையாளர்களுக்கு. முக்கியமாக சென்னை மக்களுக்கு.

வழக்கம்போல இந்த ஆண்டும் சென்னை புத்தகக் கண்காட்சி மற்றும் விற்பனை களைகட்டி வருகிறது. 2009 சென்னை புத்தகக் கண்காட்சியில் அறிமுகம் ஆவேன் என்று அடம்பிடித்த பல புத்தகங்கள் காட்சிக்குத் தயாராகிவிட்டன. சில தயாராகிக் கொண்டிருக்கின்றன.

விகடன், கண்ணதாசன், கிழக்கு என்று பல பதிப்பகங்கள் தற்போது தயார் நிலையில். ஒவ்வொரு பதிப்பகமும் தங்களுக்கென்று சில இலக்குகளுடன் களமிறங்க உள்ளனர்.

என்னென்ன புத்தகங்கள் சென்னை புத்தகக் கண்காட்சியை ஆக்ரமிக்கப் போகின்றன என்பதை அடுத்த பதிவி எழுதுகிறேன். தவிரவும், புத்தகக் கண்காட்சி நடைபெறும் தினங்களில் அங்கே நடக்கும் சம்பவங்களை முடிந்தவரை சுவாரஸ்யமாக எழுத இருக்கிறேன். அவ்வப்போது புத்தக அறிமுகம், எப்போதாவது புத்தக விமரிசனம் எழுதலாம் என்று திட்டம்.

பார்க்கலாம். எவற்றுக்கெல்லாம் நீங்கள் கொடுத்து வைத்திருக்கிறீர்கள் என்று?

நாள் : ஜனவரி 8, 2009 முதல் ஜனவரி 18 , 2009 வரை
இடம்: கீழ்பாக்கம் பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரே இருக்கும் திடல்